கோபாலனும் வெண்டைக்காயும்



கோபாலனுக்கு கோவம் கோவமாக வந்ததது, அப்படி என்ன செய்து விட்டான் , முற்றிய வெண்டைக்காயை வாங்கி வந்த நாள் முதல் , அதை சமைக்கும் இன்று வரையிலுமா , இவளது இழி பேச்சை சுமக்க வேண்டும். அதுவும் கால்  கிலோவில் மூன்றோ நான்கோ முற்றல் இருக்கத்தான் செய்யும்  . இத்தனைக்கும் , இவளை விட , இவனே மிக நன்றாக சமைப்பான், ஆடு கோழி மீன் என்று வகை வகையாக , ருசியாக செய்வான். கல்யாணம் ஆகி முதல் மூன்று வருடங்கள் இவன் சமையல் தான், ருசி பார்க்க மாமனார் , மாமியாரே வருவார்கள். கோபாலனின் அம்மாவிற்கு இது பிடிக்காமல் போக, மனைவி சமைக்க ஆரம்பித்தாள். அவளது  சமையல் மிக மிக சுமார் என்றாலும் , சகித்து கொண்டு வாழ்ந்து வந்தான். அம்மா போன பின்னரும் , இவனை சமையல் பக்கம் நெருங்க விடாமல் , அவளே தொடர்ந்தாள். 



இவ்வளவு சுமாரான சமயலை  சாப்பிட்டே , வருடத்திற்கு ஒரு ஜான் என்று அவளது இடுப்பளவு செழிப்பாக வளர்ந்தது . பல வருடங்கள் சமைத்திரிருந்தாலும் , அவளது சமையலில் பக்குவமும் ருசியும் ஏறவே இல்லை என்றே கோபாலன் நம்பினான். 2 வருடங்களுக்கு முன்பு பாழாய்ப்போன ஏதோ ஒரு மூத்திர சந்து டாக்டரிடம் சென்று  வந்ததில் இருந்து , அசைவ உணவை சமைக்க , சாப்பிட தடை போட்டாள்  இவனது மனைவி.  இவனுக்கும் அதே கதி தான் , கொடுமை . கோபாலனுக்கு வெளியே சாப்பிட பிடிக்காது , வீட்டிலோ இவனுக்கு சமைக்க , சாப்பிட அனுமதி இல்லை, இதனாலேயே இவனது மகன் தனி குடித்தனம் சென்று விட்டான். மாதம் ஒரு முறை இவளுக்கு தெரியாமல் மகன் வீட்டிற்கு சென்று ,சமைத்து , உண்டு மகிழ்ந்தான். மாதம் ஒரு முறை என்று ஆரம்பித்தது , இப்பொழுது அடிக்கடி என்று வந்து நின்றது  .மகனுக்கும் , மருமகளுக்கும்  அப்பா சமையல் என்றால் உயிர் , நல்ல வேலை அவனுக்காவது ஒரு நல்ல சமையல் செய்யும் பெண்ணாக பார்த்து கட்டி வைத்தான் . மருமகள் இவனளவு இல்லை என்றாலும் ஓரளவு நன்றாகவே சமைப்பாள் .


இவனது நினைவலைகள் இப்படி பின்னோக்கி ஒடிகொன்றுக்கையில் ,ஒரு வழியாக அவனது மனைவி வெண்டைக்காயை வைத்து இவனை திட்டி முடித்து , சமையல் ரெடி என்றழைக்க , இவன் தட்டோடு  வந்து அமர்ந்தான் . அந்த வெண்டைக்காய் கறியை பார்த்த உடனேயே வாந்தி வந்தது. ஒன்று அதை நன்றாக , கொழகொழப்பு நீங்க சமைக்க வேண்டும் , அல்லது பொறித்தாவது தர வேண்டும் , இவனிடம் விட்டு இருந்தால் , இதை சிக்கனுக்கு நிகராக சமைத்திருப்பான். சரி தின்னாமல் சமாளித்து எழுந்து விடலாம் என்று நினைத்தால் , இதே கருமம் வேறொரு வடிவில் , அடுத்த வேலை உணவில் வந்து நிற்கும். நன்றாக இல்லை என்று  சொன்னால் , வாங்கி வந்த இவன் மேலேயே பழி விழும். வாங்கி வந்த வரம் அப்படி. தட்டோடு விட்டு எறியலாம் , ஆனால் பசிக்குமே ! சரி போய் தொலைகிறது என்று தின்று முடித்தான் . எழுந்தன் , இரவு மகன் வீட்டிற்கு செல்வது என முடிவு செய்தான். 


ஆறு மணி அளவில், அவளிடம் நண்பனின் வீட்டிற்கு செல்வதாக சொல்லி கிளம்ப முற்பட்டான்.


அவளோ , காய்கறி காலி ஆகிவிட்டது , இந்த முறையாவது  நல்ல வெண்டைக்காயை வாங்கி வர சொன்னால் . நாளையும் வெண்டைக்காய் கறி தான் என்றாள் .


நெஞ்சை பிடித்துக்கொண்டு வாசலிலேயே அமர்ந்தான்  கோபாலன் ..


1 கருத்து:

Blogger இயக்குவது.