ரஜினி எனும் மாயோன் - 3 - தரமான சம்பவம்
பாகம் ஒன்று படிக்க இங்கே கிளிக் செய்யவும் -
https://tamil-thinnai.blogspot.com/2021/11/1.html
பாகம் இரண்டு படிக்க இங்கே கிளிக் செய்யவும் -https://tamil-thinnai.blogspot.com/2021/12/2.html
பாகம் 3 - தரமான சம்பவம்
---------
சந்திரமுகி மாபெரும் வெற்றி பெற்றது. பாட்ஷா / முத்து படங்களில் ரஜினி படைத்த சாதனைகளை படையப்பா முறியடித்தது. அதை எல்லாம் தூக்கி சாப்பிட்டது சந்திரமுகி. உச்சமாக 800 நாட்களுக்கு மேல் ஒரே தியேட்டரில் ஓடி சாதனை படைத்தது. அடுத்து என்ன என்று தெரிந்து கொள்ள தமிழ் திரை உலகமே துடித்தது. ரசிகர்களை பற்றி கேட்கவா வேண்டும் . ரஜினியின் ஒவ்வொரு சந்திப்பும் தலைப்பு செய்தி ஆகிறது . சினிமாவில் எப்பொழுதுமே ஒரு கணக்கு உண்டு. ஒரு மாபெரும் படத்திற்கு பிறகு, இளைப்பாறிக் கொள்ள ஒரு சிறு பட்ஜெட் படமோ இல்லை ஒரு காமெடி படமோ நடிப்பார்கள்.
கமல் அவர்கள் இதை தவறாமல் செய்வார், ஹே ராம் படத்திற்கு பிறகு தெனாலி, விருமாண்டி படத்திற்கு பிறகு வசூல் ராஜா என்று சொல்லிக்கொண்டே போகலாம். ரஜினியே இந்த உத்தியைக் அவ்வப்பொழுது கையாண்டதாக சுரேஷ் கிருஷ்ணா ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் . பெரிதான காரணம் ஒன்றும் இல்லை, ஒரு மாபெரும் வெற்றிப் படத்திற்கு பின்னர் வரும் படம் அதை விட பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அதை சமாளிக்க இப்படி ஒரு உத்தி. இதனால் பாதிக்கப்பட்ட சமீபத்திய உதாரணம் தெலுங்கு நடிகர் பிரபாஸ் , பாகுபலிக்கு பிறகு மிக பெரிய படத்தில் நடித்து கை , காலை சுட்டுக்கொண்டார்.
சந்திரமுகி இண்டஸ்ட்ரி ஹிட், அடுத்து ஒரு சின்ன படம் செய்ய போகிறாரா ரஜினி என்ற பேச்சு எழ தொடங்கியது. ஆனால் அவரோ வேறு ஒரு முடிவில் இருந்தார்.
இங்கே கால சக்கரத்தை சற்றே பின்னோக்கி நகர்த்திடுவோம் . 1996 ஆண்டில் இந்தியன் படம் வெளியாகிறது. மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் மாறுகிறது. ஒரு கமர்சியல் படமாக மட்டும் இல்லாமல் விமர்சகர்கள், ரசிகர்கள் என்று அனைத்து தரப்பினரையும் கவர்ந்த படமாக அமைகிறது. ஹிட் மேல் ஹிட் கொடுத்து, தொட்டதை எல்லாம் தங்கமாக மாற்றும் வித்தகனாக மாறியிருந்தார் ஷங்கர் . அதையடுத்து அவர் ரஜினியை சந்திக்கிறார். பரபரப்பு கூடுகிறது. அப்பொழுது சங்கர் ரஜினிக்கு முதல்வன் பட ஒன் லைனையும், எந்திரன் படத்து கதையையும் சொல்கிறார். சில பல காரணங்களால் அவற்றை ஆறப்போட்டார் ரஜினி.
அதில் முக்கிய காரணமாக கருதப்படும் சம்பவம் அரசியல் சம்பந்தப்பட்டது. அந்த வருடம் தான் ரஜினி அவர்கள் தமிழக அரசியலே புரட்டி போடும் அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறார் . “ஜெயலலிதா அம்மையார் அடுத்து ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது “ என்று அவர் பற்ற வைத்த பொறி ஜெயலலிதாவையே தோல்வி அடைய வைத்தது. அன்று மட்டும் அவர் மூப்பனாரின் அழைப்பை ஏற்று கட்சி தொடங்கியிருந்தால் தமிழகமே வேறு விதமாக மாறியிருக்கும். சரி கதைக்கு வருவோம்; இப்படி ஒரு ஆட்சி மாற்றத்திற்கு காரணமான ரஜினி அடுத்து ஒரு அரசியல் படமா என்று யோசிக்க அந்த கூட்டணி முறிகிறது.
ரஜினிக்கு 96இல் சொன்ன அதே ஒன லைனை வைத்து 1999’இல் முதல்வனை சொந்த படமாக ஆரம்பிக்கிறார் ஷங்கர். அர்ஜுன் போன்ற மத்திய தர வரிசையில் இருக்கும் ஹீரோ நடித்திருந்தாலும் அந்த படம் சூப்பர் ஹிட். ரஜினி மட்டும் நடித்திருந்தால்?! ஷங்கருக்கு அடுத்து போதாத காலமாக ஹிந்தியில் அதே படத்தை எடுக்க அது பிளாப். எந்திரனை அமீர் கானை வைத்து ஆரம்பிக்க யோசித்து , கடைசியாக கமலை வரை வந்து அந்த படத்தை எடுக்கும் திட்டம் வேலைக்கு ஆகவில்லை. இது வேலைக்கு ஆகாததால், அடுத்து தமிழில் அவர் எடுத்த பாய்ஸ் படம், அவருக்கிருந்த நல்ல பெயரையெல்லாம் காலி செய்தது. எப்படி ரஜினிக்கு ஒரு பாபா வோ , அப்படி ஷங்கருக்கு பாய்ஸ். ரஜினியாவது விநியோகிஸ்தர்களுக்கு பணத்தை திருப்பி கொடுத்து பெயரை காப்பாற்றிக் கொண்டார். ஷங்கருக்கு மீண்டும் முதல் படத்தில் இருந்து ஆரம்பிப்பது போல ஒரு நிலைமை. ஆக்ரோஷமாய் தனது இருப்பை நிரூபிக்க விக்ரமை வைத்து அந்நியன் எடுக்கிறார். பெரிய ஹிட். வர்த்தக ரீதியில் தான் நம்பர் 1 இயக்குனர் என்று நிரூபிக்கிறார். அடுத்து ரஜினியை சந்திக்கிறார். ஆட்டம் ஆரம்பமாகிறது.
அப்பொழுது எந்திரன் படம் பற்றிய பேச்சு வர அதை பின்னர் பார்க்கலாம், ஒரு சமூக கருத்துள்ள கமர்சியல் ஹிட் படம் வேண்டும் என்று ரஜினி கேட்க, உதயமானது சிவாஜி படம். இது ரஜினிக்கு 100ஆவது தமிழ் படம். தயாரிப்பாளர் யார் என்று ரஜினியே கையை காட்டுகிறார். ஏவிஎம் ஸ்டூடியோ சென்று சரவணனிடம் பேசுகிறார். அவர்களுக்கு ஷங்கர் மேல் சிறிய தயக்கம் இருந்தாலும், ரஜினியே கேட்ட பின்னர் மறுப்பார் யார்? பிரம்மாண்டமாக தயார் ஆகிறது சிவாஜி திரைப்படம்.
ஷங்கர் வழக்கம் போல இரண்டு ஆண்டுகளில் படத்தை நிதானமாக அதே சமயம் ஜனரஞ்சகமாக இயக்குகிறார். படத்தின் ட்ரைலருக்கு மிகப்பெரிய வரவேற்பு. பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆகின்றன. அனைத்து ஏரியாவுக்கு விற்று தீர்கிறது . வியாபார ரீதியாக ஏவிஎம் நிறுவனத்திற்கு வெளியிடும் முன்னரே நல்ல லாபம் கிடைக்கிறது .
படம் வெளியாகிறது, அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை பெறுகிறது. ஷங்கர் ஏற்கனவே ஜென்டில்மேன் / முதல்வனில் அரைத்த பார்முலாவை ரஜினிக்கு ஏற்றவாறு பொருத்தியிருந்தார். சுஜாதாவின் வசனங்கள் படத்தை அடுத்த கட்டத்திற்கு செல்ல வைத்தன . "சும்மா அதிருதில்ல " என்ற பன்ச் டயலாக் மெகா ஹிட் ஆகிறது . மொட்டை தலையுடன் ரஜினி வருவது போன்ற ஒரு விளம்பரம் நாளிதழ்களில் வெளியாகி தமிழகத்தையே பேச வைக்கிறது . அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படமாக சிவாஜி கொண்டாடப்படுகிறது. இதில் வரும் ஒரு பாடலில் ரஜினி கை விரலில் இருந்து செல்லும் துப்பாக்கி சுட்டு விட்டு, மறுபடியும் அவரது கைக்கு வந்து சேரும். இது வட இந்தியாவில் மிகப் பிரபலமாக, ரஜினிகாந்த் ஜோக்குகள் பிறக்கின்றன . அன்றைய தேதியில் மிகப் பெரும் பொருட்செலவில் உருவான இந்த படம் 150 கோடி வசூல் செய்கிறது. அன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் உச்ச வசூல் அது தான்.
ரஜினியும் , ஷங்கரும் அவரவர் துறையில் தன்னை ராஜாவாக நிலை நிறுத்துகிறார்கள். ரெக்கார்டுகளை உடைக்கவே பிறந்தவர்கள் ரஜினி மற்றும் ஷங்கர் என்பது நிரூபணம் ஆகிறது. வெற்றி மேல் வெற்றி அடுத்து தலைவர் எடுக்கும் முடிவு இப்படி இருக்கும் என்று யாரும் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள்.
கருத்துகள் இல்லை