சார்பட்டா பரம்பரை -
இதே மண்ணில் ஆயிரம் ஆண்டுகாலமாக உழைத்து, இந்த மண்ணை கட்டமைத்த மக்கள் முன்னேற தான் எத்தனை தடைகள். எத்தனை வன்மம் என்பதே இப்படத்தின் சாராம்சம். இதையே ஒரு பட்டியலின சாதி சார்ந்த ஒருவன் படித்து வெளியே வருவதர்குள் அவன் சந்திக்கும் வன்மம் , தடைகள் என்று , ஆறு வயலின் வாசித்து ஒரு சோக கதையாக சொல்லி இருந்தால், காலா , கபாலியை போல ஒரு சாதாரண படமாக முடங்கி போகியிருக்கும். சொல்ல வந்த கருத்துக்களை நேரடியாக திணிக்காமல் , அதே சமயம் , செவிட்டில் அறைவது போல எடுத்தாலே தமிழ் மக்களிடம் எடுபடும் . சுப்ரமணியபுரம், பருத்திவீரன், அசுரன் போன்ற வெற்றி படங்களும், மொக்கையான ஒரு ஐநூறு தோல்வி படங்களும் இதற்கு சான்று. நிற்க, இதில் ஏன் மாரி செல்வராஜின் இரு காவியங்களை, வெற்றிப்படங்களை சேர்க்கவில்லை என்று யோசித்தால், காரணமாகத்தான் .
இருவருமே தலித் சினிமாவின் இன்றைய இளவரசர்கள் என்றாலும், அவரவர் சார்ந்த மக்களை வைத்து இரு வேறு துருவங்களாகவே படம் எடுக்கிறாரகள். சினிமா ரசிகனாக நமக்கு கொண்டாட்டமே . அதே சமயம் குறியீடு வைக்கிறேன் என்று ஒரு படம் பார்க்கும் சீரான அனுபவத்தை சிதைக்கும் காரியத்தையும் இருவரும் பரிசோதித்துக்கொண்டே இருக்கிறார்கள். அம்பேதக்காரை இன்றும் சினிமாவில் பார்த்தால் எரியும் முண்டங்களுக்கு இன்னும் எரிய வைக்க தான் இது என்றாலும், ரஞ்சித்தின் படம் என்றால் எத்தனை முறை அம்பேத்கார் வருவார் என்று யு பி எஸ் சி, தேர்வில் வரும் அளவிற்கு கொண்டுபோக வேண்டாம். ஆனாலும், சில பிண்டங்கள் அதை பார்த்து கதறுவதை பார்க்க நன்றாகவே இருக்கிறது.
சரி, படத்தின் கதை என்ன, ஒரு தலித் (நேரடியாக சாதி வேண்டாம்) , ஒரே ஒரு வெற்றியை, மேல் சாதி அரக்கர்களின் முன்பு பெற எவ்வளவு போராடுகிறான் எனபதே கதை. இந்த கதை, கடந்த இரு நூறு ஆண்டுகளாக அடிபட்டு, மிதிபட்டு முன்னேறிய அணைத்து பட்டியலின மக்களளுக்கும் பொருந்தும். நாம் முன்பே சொன்னது போல, இதை சொல்ல எடுத்துக்கொண்ட களம் , சிறிது புதிது. தொண்ணூறுகளில், எப்படி மண் வாசனையான படங்களை ரசிக்கும் படி கொடுத்து ஒரு சில சாதிகளின் புகழ் பாடினார்களோ, அதே டெம்ப்ளட்டாய் இப்பொழுது எளிய மக்களின் கஷ்டங்களை ஒரு கமர்சியல் சினிமாவின் மூலமாக பொது ஜனத்திடம் சேர்த்துள்ளார் ரஞ்சித் .
ஆர்யா, பட்டயை கிளப்பி உள்ளார், விக்ரமை போல உடல் வருத்தி , பெருத்து , இளைத்து என்று ஆட்டம் காட்டி இருக்கிறார். ஆனாலும் படத்தின் ஆகப்பெரிய transformation காட்சிகளில் ஒன்றில் நடிப்பு வராமல் தவிக்கிறார். ஆர்யாவின் அம்மா அவனை ஆதரிக்கும் அந்த காட்சியை ஒரு முறை பார்த்து விட்டு எனக்கு மறுப்பு தெரிவிக்கலாம் .
இந்த படம் ஒரு அட்டகாசமான ஹாலிவுட் டெம்ப்ளேடை ஃபாலோ செய்கிறது. ஒரு நெடுங்கால பிரச்சினை , அதிலிருந்து ஒரு சவால் என்று ஆரம்பிக்கும் படத்தில் , அடுத்து நாயகன் entry, அவன் சார்ந்த பில்டப், அவனுக்கு நிகராக ஒரு டான்சிங் ரோஸ் , அவனை வென்றவுடன் ஒரு தொய்வு , ஒரு downfall, அதிலிருந்து ஒரு transformation அடுத்து சக்ஸஸ் , சுபம் .. நடித்திருக்கும் அத்தனை பேருக்கும் வாழ்த்துக்கள் ..
படத்தில் நம்மை நெருடியவை .. ஆர்யாவின் அம்மா கிறிஸ்தவராக மாறினாலும் , ஆர்யாவின் பெயர் கபிலன், இந்து கடவுள்களின் சாட்சியாக திருமணம், ஆர்யாவின் பின்னணியில் புத்தர் , மனைவி மாரியம்மா என்று ஒரு திசை தெரியாமல் இருக்கிறது கபிலனின் குடும்பம் .. சொல்ல வந்த அத்தனை கருத்துக்களையும் திணித்தால் இப்படித்தான். டாடியின் மனைவி ஒரு மதம் மாற்றும் பேர்வழியா?! இராமனின் மாமாவாக இருப்பவர் ஒரு பழைய ஜமீனை நினைவு படுத்துகிறார் . இவரும் வேம்புலியும் இல்லையேல் இந்த படம் இல்லை. படம் முழுக்க தான் மேல் சாதி என்று பறைசாற்றும் ராமனின் மாமா , எப்படி ரங்க வாத்தியாரிடம் ராமனை அனுப்பினார் போன்ற பல கேள்விகள் எழுந்தாலும் , படத்தை பார்க்கும் போது இவை நம் அனுபவத்தை கெடுக்கவில்லை .
மற்றபடி தேவையான அளவிற்கு புத்தர் மற்றும் அம்பேத்காரின் குறியீடு வைத்து எதிர் கும்பலை புலம்ப விட்டதற்கே இரஞ்சிதை பாராட்டலாம். ஆனாலும் புது உடன்பிறப்பாக உருவெடுக்கும் இரஞ்சித்தை வன்மையாக கண்டிக்கிறேன் 😉.
விமர்சனம் நல்லாருக்கு ஐயா.
பதிலளிநீக்குநன்றி அய்யா
பதிலளிநீக்கு