தமிழனுக்கு இந்தி தேவையா - பாகம் இரண்டு

பாகம் ஒன்று - link


வீட்டிலேயே உட்கார்ந்து , வடகறி  ஆன்லைனில் ஆர்டர் செய்ய ஹிந்தி தேவையாம் .  சோமாடோகாரன் ஒருவன் இப்படி சொல்ல பற்றிக்கொண்டது நெருப்பு . எனக்கு ஒரே கேள்வி தான். பான் இந்தியா தொழில் செய்யும் ஒரு வியாபாரி, அலுவல் மொழியாக ஆங்கிலத்தை அல்லவா வைத்திருக்க வேண்டும் ? இன்போசிஸ் தொடங்கி அனைத்து ஐ டி கம்பெனிகளில் ஆங்கிலமே பொது மொழி. இதிலும் நாங்கள் இந்தியில் தான் பேசுவோம் என்று தர்க்க டார்ச்சர் செய்யும் பேர்வழிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். 


Everyone should know Hindi': Zomato executive's remark to customer triggers  language debate online | Trending News,The Indian Express

சரி , யாரோ ஒருவர், ஹிந்தி தேசிய மொழி, அது கூட தெரியாதா என்று கேட்டுவிட்டார். இது இவ்வளவு பெரிய பிரச்சனையா என்று சோமாடோ சி ஈ ஓ கதறி இருக்கிறார் . 

ஆம் இது ஒரு பெரிய பிரச்சனை தான். 

உதாரணத்திற்கு நாம் ரங்கநாதன் தெருவுக்கு எதோ ஒன்று வாங்க செல்கிறோம். நம்மை வரவேற்கும் கடைக்காரர்  "நமஸ்தே , ஆப் கோ கியா சாஹியே "  என்று சொன்னால் என்ன நினைப்போம் ? 

நாம், சென்னையில் இருக்கிறோமா , இல்லை வட மாநிலத்தில் இருக்கிறோமா என்ற எண்ணம் வருமா வராதா? 

சரி, கடைக்கு வந்தாச்சு, அடுத்து என்ன செய்ய முடியும்? 
 
ஒன்று, அவரிடம், எனக்கு ஹிந்தி தெரியாது, தமிழில் கேளுங்க என்று சொல்லலாம். ஆனால் கடைக்காரருக்கு தமிழ் தெரியவில்லையென்றால் நாம் சொல்வதே புரியாது . 

"கென் யு ப்ளீஸ் அஸ்க் தட் இன் இங்கிலிஷ்" என்று ஆங்கிலத்தில் கேட்கலாம், கடைக்காரருக்கு ஆங்கிலமும் தகிடு தத்தோம் என்றால் பதில் வராது . 

அடுத்து, இதுவரை நாம் பார்த்த ஹிந்தி படங்களை வைத்தும் , பானி பூரி பையனிடம், "பையா" இன்னொரு பூரி ஓசியில் கொடு என்று கேட்டிருக்கும் அனுபவத்தை வைத்தும், அவரிடம் பேசி பார்க்கலாம். 

இதுவும் ஒத்துவரவில்லை என்றால் கடைசியாக, சைகை காட்டி , ஆதிவாசி போல ஷாப்பிங் பண்ணலாம்.

இது அதீத கற்பனையாக தற்பொழுது தெரியலாம். ஆனால் பத்து வருடங்களில் இது நடக்காது என்று சொல்ல முடியுமா? ஏற்கனவே ஹோட்டலில், சாம்பார் கேட்டால் சட்னி வைக்கிறார்கள். சென்னையில் கட்டும்   பெரிய  கட்டிடங்களை எல்லாம் வடமாநில தொழிலாளர்களே கட்டுகிறார்கள்.  அவர்களுக்கு தெரிந்த ஒரே மொழி ஹிந்தி. இப்பொழுது தெரிகிறதா, தமிழர்கள் ஏன் தேசிய மொழியே அல்லாத ஹிந்தியை கற்க வேண்டும் என்று? அவர்கள் வசதியாக வந்து , அவர்களுக்கு சவுகரியப்பட்ட மொழியிலேயே பேசி, மகிழ , நாம் ஹிந்தி கற்க வேண்டுமாம். எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? 

வட மாநிலத்தில் இருந்து தமிழகம் வந்தால் , தமிழ் கற்று, தமிழில் தான் வியாபாரம் செய்ய  வேண்டும். அதேபோல், நாம் வட மாநிலம் சென்று தோசை கடை போட்டாலும், இந்தியில் தான் பேச வேண்டும். அங்கிருப்பவர்களிடம் தமிழில் "இன்னும் சாம்பார் ஊத்தவா" என்றால், அவன் நம் பரம்பரையை இழுத்து திட்டுவான். மொத்தமாக , யாருக்கு எங்கே, என்ன மொழி "தேவையோ" அதை கற்க வேண்டும்.  ஆக , தேவையே மொழியை நிர்ணயம் செய்கிறது. ஆனால் என்ன நடக்கிறது? தமிழர்கள்  வட இந்தியா சென்றால்  நாம் ஹிந்தி கற்க வேண்டும் , அவர்கள் இங்கே வந்தாலும் , நாமே ஹிந்தி கற்க வேண்டும் என்று நினைப்பது பாசிசமா இல்லையா? 




இது தான் இங்கே பிரச்சனை. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.