காலை ஆறு மணிக்கே எழும் பழக்கம் கொண்ட சுந்தரம், எழுந்ததும் தலை முடியை சரி படுத்திகொண்டு தான் அடுத்த வேலைக்கே செல்வார். இதை படித்தவுடன் சுந்தரத்திற்கு எதோ தியாகராஜ பாகவதரை போல் இரண்டடி நீள கூந்தல் என்று நினைக்க வேண்டாம், அவருக்கு வழுக்கை. சாதாரண வழுக்கை இல்லை, U என்ற எழுத்தை திருப்பி போட்டது போல இருக்கும் வழுக்கை. முன் தலையில் ஆரம்பிக்கும் இந்த வழுக்கை , பின் மண்டையின் பாதியில் தான் முடியும். வழுக்கை என்றாலும் , நல்ல பள பளப்பான மண்டை, சந்திரனை தவிர எந்த விளக்கு பட்டாலும் எதிரொலிக்கும்.
இதற்கு நடுவே ஒரு அணையை போல சிறு முடி கீற்று குறுக்கிட்டு செல்லும். அதாவது அவரது வலது காதின் நுனியில் ஆரம்பிக்கும் ஒரு பதினேழு முடிகளை இடது பக்க காது படும் வரை வளர்த்து வைத்திருந்தார். எப்படி நமது தேசிய கொடியின் நடுவே ஒரு வெள்ளை பட்டை செல்லுமோ, அது போல இந்த முடியும் இவரது மண்டையில் குறுக்கே சென்றுகொண்டிருந்தது . அந்த முடியை தான் அவர் தினமும் காலை எழுந்தவுடன் சரி செய்து கொள்வார். முடியே இல்லாவிட்டாலும் மாதம் ஒரு முறை முடி திருத்தம் செய்ய செல்வார். முடி திருத்துபவன், இவர் வரும் முன் கீழே கிடக்கும் வெட்டிய முடிகளை சேகரித்து, சுந்தரதிர்க்கு முடி வெட்டும் பொழுது சிதற விடுவான். பொய்யகவே இருந்தாலும் நமக்கு இவ்வளுவு முடியா என்று சுந்தருக்கும் ஒரு அல்ப சந்தோசம் கிடைக்கும். முடி திருத்துபவனுக்கோ அதிக வேலை இல்லாமல் காசு கிடைத்து விடும். எல்லோரும் இவரை போல சொட்டையாகவோ , வழுக்கையாகவோ இருந்தால் எப்படி இருக்கும் என்று அவன் கற்பனை பண்ணிக்கொள்வதும் உண்டு.
சரி விசயத்திற்கு வருவோம், ஆறு மணிக்கு எழுந்து, காலை கடன்களை முடித்து, ஆறு முறை இருக்கும் முடியை வலதில் இருந்து இடத்திற்கு சீவி ஒரு வழியாக எட்டு மணிக்கு வண்டியை எடுக்க தயார் ஆனார். எடுக்க செல்லும் முன் , பாக்கட்டை தொட்டு பார்த்த சுந்திரம் , சீப்பு இல்லாததை கண்டு கோவம் கொண்டார். ஐந்து நிமிடத்தில் அதை எடுத்து, மற்றும் ஒரு முறை தலை சீவி , தலை கவசம் அணிந்து புறப்பட்டார். அலுவலகத்திற்கு வரும் பொது மணி ஒன்பது. வண்டியை ஒரு மரத்தின் ஓரத்தில் நிறுத்தி விட்டு , தலை கவசத்தை கழட்டியவுடன் அந்த சம்பவம் அரங்கேறியது. எங்கிருந்தோ வந்து அந்த மரத்தில் அமர்ந்திருந்த அந்த காகத்திற்கு அந்த நேரத்தில் வயிற்றை கலக்கியது. அங்கேயே அந்த காகம் ஒரு நிம்மதி பெருமூச்சுடன் காலை கடனை கழிக்க, அது சுந்தரத்தின் நடு வழுக்கையில் சொத் என விழுந்தது. பள பளக்கும் மண்டையின் நடுவே விழுந்த காக்கையின் கக்கா அப்படியே முன் மண்டையை நோக்கி செல்ல, அருகில் நின்றிருந்த அந்த சின்ன பையன் சிரிக்க,சுந்திரம் கோவத்தின் உச்சிக்கே சென்றார். ஒரு வழியாக கர்ச்சீப் வைத்து துடைத்து , அந்த சார் பதிவாளர் அலுவலகத்தின் உள்ளெ சென்றார்.
அன்று வந்த அத்தனை பேரிடமும் எரிந்து விழுந்தார், சார் பதிவாளர் சுந்தரம். வெளியே சிரித்த பையன், அவன் தந்தை சகிதம் வந்த பொழுது , அவர்களின் பாத்திரத்தை விசிறி எறிந்தார். வழுக்கையாக இருப்பது எவ்வளவு கஷ்டம் , வெய்யில் வந்தால், ஒரே வியர்வை, மழையில் நின்றால் , மண்டை வலிக்கும், எல்லா இடத்திலும் ஒரு ஏளன பார்வை, ஒரு நமுட்டு சிரிப்பு , ஒரு நக்கல். இவ்வளவு ஏன் , சுந்திரம் பெரிதும் மதிக்கும், ரஜினி கூட சிவாஜி படத்தில், எம் எஸ் பாஸ்கரை பார்த்து, போடா சொட்டை என்று சொல்லுவார். இத்தனைக்கும், ரஜினியே இவரை போல ஒரு வழுக்கை தான். அன்றைய நாள் இப்படியே முடிய, இரவு முழுவதும், தூக்கம் தொலைத்தார்.
அடுத்த நாள் காலை ஒரு முடிவு எடுத்தார். ஒரு விக் வாங்கி அணிந்து கொண்டார், இது முன்பை விட காமெடியாக தெரிந்தது. முன்னை விட பல பேர் சிரித்தனர். முதல் நாள் வழுக்கையாக பார்த்து விட்டு இன்று நவரச நாயகன் கார்த்திக் ஹேர் ஸ்டைலில் வந்தால் யாருக்கு தான் சிரிப்பு வராது? சுந்தரத்தின் மனைவிக்கே இது பிடிக்கவில்லை. ஆனாலும் சுந்தரத்தின் மனதில் ஒரு தெளிவு. ஒரு நிம்மதி. அடுத்தவர் சிரிப்பது இப்பொழுது பெரிதாக தெரிவதில்லை. ஆனந்தத்தில் வாழ்ந்தார்.
இரு வருடம் இப்படியே சென்றது, ஒரு நாள் சிக்கனலில் யாரோ வண்டியை எடுக்காமல் நிற்க, எவனோ ஒருவன், டேய் சொட்ட வண்டியை எடுடா என்று கத்த , சுந்தரம் திரும்பி பார்க்கவே இல்லை.
ஏன் என்றால் அவர் இப்பொழுது சொட்டை / வழுக்கை இல்லை.
கருத்துகள் இல்லை