மனைவி அமைவதெல்லாம் ..

"இட்லியா இல்லை பிரெட்டா" 

கல்யாணம் ஆகி ஆறு ஆண்டுகள் கழித்து இப்படி ஒரு கேள்வி வந்தது.  முதல் நாள் இரவே, நாளை இட்லி உப்புமா என்று ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டது. அதை மீறி  "டிபனுக்கு இட்லியா இல்லை பிரட்டா" என்று காலையிலேயே குண்டை போட்டாள் மனைவி . இதில் "உனக்கு என்ன தேவை" என்ற வாக்கியம் விடுபட்டுள்ளதை கவனித்தால் நீயும் கணவனே. அதே போல , இட்லி உப்புமா எங்கே என்பதை கேட்காமல் அடுத்த வேலையை பார்ப்பத்தில் கணவனின் சாமர்த்தியம் உள்ளது. காரணம் நமக்கு இதை கேட்கவாவது ஆள் இருக்கிறார்களே .. 


சரி பாதி 90ஸ் கிட்ஸ் முடி கொட்டி , தொப்பை வளர்த்து பெண் தேடும் காலம் இது. தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழிக்கலாம் , சரி. ஒரு மனைவி கிடைக்காவிட்டால்?எதை அழிப்பது? வரதட்சணை வாங்குவது ஒரு  கேடு கெட்ட  சமுதாயத்தின் உதாரணம் என்றால், கார் வேண்டும், ஒரு லட்சம் சம்பளம் வேண்டும் என்று கேட்பவர்களை எதில் சேர்ப்பது ?  

இப்படிப்பட்ட பிரச்சனைகள் இல்லாமல் மனைவி ஒருத்தி கிடைத்தால், இட்லியும் - ப்ரெட்டுமே பூரியாக தெரியும். தெரிய வேண்டும். சரி கதைக்கு வருவோம் ..   முதல் நாள் தான் இட்லி , அதனால் காலை பிரட்டை டிக் செய்தேன். உட்கார்ந்த இடத்தில் பிரெட் வராது என்று தெரியும். அதனால் சுறுசுறுப்பாக எழுந்து ,  அதை செவ்வனே ரோஸ்ட் செய்து பீனட் பட்டர் போன்ற வஸ்துக்களை தடவி அமர்க்களப்படுத்தி, கணக்கை சரி பார்த்தேன்.  நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற இந்தியாவின் ஆகச் சிறந்த  கோட்பாட்டின் படி வாழ்ந்து வருவதால், மூன்று செட் பிரட்டுடன் காலை சிற்றுண்டியை முடித்தாகிவிட்டது. 

இது தான் திருமண வாழ்க்கை. நமக்காக நாயாக உழைக்கும் மனைவிக்கும், அம்மாவுக்கும் நம்மால் செய்து தர முடிந்த இடத்தில் செய்து தருவது தப்பே இல்லை. அதே நேரத்தில் வாரம் முழுக்க ப்ரெட்டையோ , இட்லியையோ திங்க முடியாது. இது நமக்கும் தெரியும், மனைவிக்கும் தெரியும். இதில் ஒரு சமன்பாட்டு பார்முலாவை எட்டி விட்டால் பிரச்சனை தீர்ந்தது. 




அதற்காக சண்டை வராமல் இருக்குமா என்பது போன்ற விசுத்தனமான கேள்விகளை கேட்க கூடாது. தினமும் சண்டை வரலாம். எங்கே உக்கிர தாக்குதல் நடத்துவது, எங்கே அடிவாங்கி செல்வது என்பது பல வருட அனுபவத்தில் கற்பது. இதையெல்லாம்  வேலைக்கு விண்ணப்பிக்கும் ரெசுமில் சேர்த்தால், இதுக்கே வேலை கொடுக்க வேண்டும். 

நிற்க , இதுவரை கணவனின் பார்வையிலேயே இந்த உலகத்தை பற்றி பேசுகிறாயே , பெண்ணின் கஷ்டங்கள் புரியுமா என்று கேட்டால் , ஓரளவுக்கு என்றே சொல்ல முடியும். 

சுமைதாங்கி என்பதற்கான ஆதாரம் இவர்கள்.  யோசித்து பாருங்கள், யார் என்றே தெரியாத ஒரு குடும்பத்திற்குள் நுழைந்து, அனைவரையும் அனுசரித்து நன்மதிப்பை பெற வேண்டும்.  அதே போல, தினமும், மூன்று வேளை சோறு, நாலு காபி கேட்டு டார்ச்சர் செய்யும் நம்மையும் சமாளிக்க வேண்டும்.  பாத்திரம் தேய்ப்பது, துணியை மெஷினில் போட்டு எடுப்பது என்று முதுகை முறிக்கும் வேலை பார்ப்பவர்கள் அவர்கள். சம்பளமே கிடையாது. 

பிரசவத்தின் பொழுது, ஆபரேஷன் தியேட்டரில் உள்ளே இருக்கும் வாய்ப்பு கிடைத்தது.  பல மணி நேர போராட்டம் அது. நாமாக இருந்தால், எழுத்து ஓடி இருப்போம். கையை பிடித்து கொண்டு கூட நிற்கலாம், வலியில் சரி பாதியை வாங்க முடியுமா? முடியாது. ஒரு குழந்தை கொண்ட நம்மக்கே இந்த பாடு என்றால், அந்த காலத்தில், புது வருட காலண்டரை மாற்றுவது போல பெற்றெடுத்த மங்கைகளை எவ்வளவு போற்றினாலும் தகும். 


பெண்கள் நம் நாட்டின் கண்கள், நுரையீரல்கள் என்று சமூக வலைத்தளங்களில் பில்டப் செய்வதை விட்டு, இருவரும் சமம் , முடிந்த வரை உதவுவோம் என்று நகர்ந்தால் வாழ்க்கை உருப்படும். 


இவ்வளவு ஐஸ் உருக பேசுகிறாயே, நீ சரி பாதி வேலையை செய்ய வேண்டியதுதானே என்ற கேள்வி எழும். வந்தால், மறுபடியும் முதல் பேரா வில் இருந்து ஆரம்பிக்கவும். 


இந்த போஸ்டை இன்று போடுவதற்கான காரணம் ஒன்றுதான். 


கல்யாணமாகி ஆறு ஆண்டுகள் முடிந்து விட்டது . இந்த வருடம், ஆனிவர்சரி கிப்ட் வாங்க வில்லை, அவள் வாங்கிவிட்டாள் . அடி வாங்காமல் தப்பிக்க  இந்த போஸ்ட்.  


பி .கு : எதற்கும் என்னிடம் இருந்து ஒரு நாலு நாளைக்கு facebook / வாட்ஸ்அப் மெசேஜ் / போஸ்ட் வருகிறதா என்று கவனிக்கவும் 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.