இந்தியாவும் தாலிபானும்
மீண்டும் தாலிபான் ஆட்சிக்கு வந்து இருபது ஆண்டு காலம் பின்னோக்கி சென்றிருக்கிறார்கள்.
இவற்றை பற்றி படிக்க படிக்க, நாம் எவ்வளவு முன்னேறிய நாட்டில் இருக்கிறோம் என்ற நினைப்பே வருகிறது . அங்கே நடக்கும் பிரச்சனை இஸ்லாமிய பிரச்சனை அல்ல. ஏனென்றால் அங்கே கொல்பவர்களும் இஸ்லாமியர்கள் - கொல்லப்படுபவர்களும் இஸ்லாமியர்களே. ஒரு நல்ல முஸ்லீம் - கெட்ட முஸ்லீம் சண்டையாக எடுத்துக்கொள்ளலாம்.
இஸ்லாம் ஒரு பிற்போக்கு மதம் என்று சொல்கிறார்களே, அதுதான் இதற்கு காரணமா? பதிலாக ஒரு முக்கியமான விஷயத்தையும் விவரிக்க வேண்டும் . அனைத்து மதங்களிலும் பிற்போக்கு தனம் இருக்கிறது. நமக்கு அடுத்தவரின் , அடுத்த மதத்தின் விதிகள் மட்டுமே பிற்போக்காக தெரியும். உதாரணமாக சாய் பாபா எந்த மதம் என்று தெரியவில்லை, ஆனாலும் வியாழக்கிழமை மட்டும் ஏன் ஸ்பெஷல்? பாபாவிற்கு வெள்ளிக்கிழமை பிடிக்காதா? இந்த பிற்போக்கு விஷயத்தில் சில மதங்கள் முன்ன, பின்ன இருந்தாலும், பிற்போக்கு இல்லாத ஒரு மதத்தை பார்க்க முடியாது. . அப்படி ஒன்று இருந்தால், அது மதமாக இருக்க முடியாது.
காரணம் ஒன்று தான், அனைத்து மதங்களின் கட்டமைப்புகளும், விதிகளும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டவை. இன்று அதை மாற்றும் அத்தாரிட்டி யாரிடமும் இல்லை. இதனாலேயே ஜக்கி போன்றவர்கள் , தனி விதி செய்து கல்லா கட்டுகிறார்கள். எதையும் நம்பும் ஒரு கூட்டம் இருக்கும் பொழுது எதுவும் நடக்கும் .
சரி கதைக்கு வருவோம், ஒரு நாட்டில் ஸ்திரமான அரசாங்கம் இல்லாவிட்டால், என்னென்ன நடக்கும் என்பதற்கான அப்பட்டமான சாட்சி இன்றைய ஆப்கானிஸ்தான்.
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் தான் என்பதை போலவே இருக்கிறது ஆப்கானிய வரலாறு. முதலில், சோவியத் ரஷ்யா படையெடுப்பு , பின்னர் முஜாகிதீன், பின்னர் தாலிபான், அடுத்து அமெரிக்க பப்பட் ஆட்சி, கடைசியாக இப்பொழுது தலிபான் என்று மாறி மாறி அந்த தேசத்தை சின்னாபின்னமாகி வருகிறார்கள். மிக முக்கியமாக, அங்கே பெண்களுக்கு 1970களில் கட்டற்ற சுதந்திரம் கொடுத்திருந்த நாடு இது என்பதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?
"எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்" என்பதர்கான உதாரணம் இந்த தேசம்.
அப்படியே சற்று கிழக்கு நோக்கி வருவோம். பாகிஸ்தானுக்கும் - ஆப்கானுக்கும் மத ரீதியில் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், அங்கே பெரிய மதவாத, தீவரவாத அச்சுறுத்தல் இருந்தாலுமே, ஆப்கனை போல இல்லாமல், ஓரளவு வளர்ந்த தேசமாகவே இருக்கிறார்கள். நமக்கு பாகிஸ்தான் எதிரி என்பதனால், நம் சொந்த வரலாற்றுக்கு வருவோம்.
இந்தியா, இன்று வரை சந்திக்காத பிரச்சனைகளே இல்லை. முகலாயர்கள் படை எடுப்பில் ஆரம்பித்து , பிரிட்டிஷ் அடிமைகளாக இருந்து 1947இல் சுதந்திரம் பெற்றோம் . பிறகு காங்கிரசின் சுமாரான பல ஆட்சிகளையும் , சூப்பரான சில ஆட்சிகளையும் பார்த்து , இடையில் தேவா கவுடா காமெடிகளையும் பார்த்து , வாஜ்பாயின் ஆட்சியில் பூரித்து, மன்மோகன் சிங்க் ஆட்சியில் சில்லறையை சிதறவிட்டு பின்னர் அவரது அடுத்த ஆட்சியில் ஊழலால் அசிங்கப்பட்டு, இப்பொழுது ஜி யின் ஆட்சியில் வந்து நிற்கிறோம்.
நாம் எவ்வளவு தான் ஒரு ஆட்சியை , அல்லது கட்சியையோ விமர்சித்தாலும். எதிர்த்தாலும், இவர்கள் அனைவருமே இந்தியாவை ஸ்திரமான ஒரு இடத்தை நோக்கி நகர்த்தி இருக்கிறார்கள். 1990 களில் நரசிம்மராவ், மன்மோகன் மட்டும் இந்தியாவில் உலகமயமாக்களையும் , லைசென்ஸ் ராஜ்யத்தையும் ஒழிக்காமல் இருந்திருத்தல், ஒரு வேலை இந்தியாவே ஆஃகானை போல மாறி இருக்கலாம்.
கருத்துகள் இல்லை