டிவிஎஸ் பிப்டியும் - புழுதி பறக்கும் செம்மண்பூமியும்..

விடலை பருவத்தில் , விடுமுறை வந்தால் தவறாமல் எழும் ஒரே கேள்வி பின்னவாசலா இல்லை ஆர் யி சி யா என்பதே . ஒரு பக்கம் நண்பர்கள் , வாய்க்கால், வரப்பு , கிரிக்கெட் போன்ற  அளவில்லாத  பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பின்னவாசல். மறுபக்கம் கால் வைத்தாலே படிப்பு நெடி அடிக்கும்  செம்மண் பூமியான துவாக்குடி . 



இதில் எதை தேர்ந்தெடுப்பது என்பதில் என்றுமே எனக்கு சந்தேகம்  இருந்ததில்லை . 

ஆனாலும் "மாடு நினைத்த இடத்தில் தொழுவம் கட்டுவதா" என்று , பெற்றோர்கள் நம் சிந்தனைக்கு மாறாக முடிவெடுப்பதில் கில்லாடிகள் . பின்னவாசால் என்று நினக்கும் முன்பே நம்மை பார்சல் கட்டி துவாக்குடிக்கு அனுப்பி வைப்பார்கள் . 

என்ன தான் நம் மன வரிசையில் இரண்டாம் இடம் பிடித்த ஊர் என்றாலும் , அந்த ஊருக்கும் ஒரு கிக் இருக்கத்தான் செய்கிறது. திருச்சியில் இருந்து, ஒரு மணி நேர ஜன்னல் ஓர பேருந்து பயணம் , நல்லம்மாவின் தட புடலான வரவேற்பு , ஓசியில் கிடைக்கும் பாதாம் கொட்டைகள் என்று ஆரம்பித்து பெரியம்மாவின் அட்டகாசமான சமயல் , நேர்த்தியான பதிமூன்று தெருக்கள் , அகண்ட மைதானங்கள்  , சோர்வடைந்த பழைய கட்டிடங்களும் என்று சொல்லிக் கொண்டே போகலாம். நிற்க . இந்த இடத்தில் - இப்பேர் பட்ட ஒரு ஊருக்கு விடுமுறையில் செல்வதில் என்ன பிரச்சனை என்று  அனைவரும் நினைக்கக்கூடும் . 

ஒரே பிரச்சினை தான் . ஓடியாடுகிற வயதில் ஒரு மணிநேரம் படிக்க சொல்லுவார்கள் அவ்வளவு தான். ஆனந்த விகடனும் குமுதம் என்றால் கூட பராயில்லை, பத்து வார்த்தைகளை கொடுத்து இதற்கு பாஸ்ட் டேன்ஸ், பிரசெண்ட் டேன்ஸ் எழுதி வா என்றால் அந்த குழந்தை பாவம் என்ன செய்யும். அதை மட்டும் தாண்டிவிட்டால் ராஜாவாக வலம் வரலாம் . லக் அடித்தால் பிலக்  தியேட்டரில் படம் பார்க்கலாம் . படிப்பின் அவசியத்தை ஒவ்வொரு நொடியும் உணர்த்தும் ராஜ்யம் அது. அதில் ece எனும் ஒரு  குறு நிலத்தின் மன்னர் தான் கதையின் நாயகனான பெரியப்பா அவர்கள். 

சம காலங்களில் அவரை பார்க்கும் பொழுதெல்லாம் தோன்றும் ஒரே கேள்வி - இவர் எப்படி இவ்வளவு ஸ்லிம் ஆக இருக்கிறார் என்பது தான். காரணம் அவர் உடற்பயிற்சி என்று ஒன்று செய்ததை நான் பார்த்ததே இல்லை.   நமக்கெல்லாம் வேலை கிடைத்து நாலு ஆண்டுகளில் வேலையே செய்யாவிட்டாலும் தொப்பை வந்து விடுகிறது . அதனாலேயே பல சமயங்களில் சித்தப்பாவின் சைடில் ஒதுங்கி விடுவது உண்டு. அவரது தொப்பைக்கு முன்னால் நம்முடையது சிறிதாக தெரியும் அவ்வளவு தான் . 

பல பத்தாண்டுகளாக வேலையில் இருக்கும் இவர் இன்று கூட நடந்தே வேலைக்கு போககூடியவர்.  பல சமயங்களில் அவருடன் காலேஜுக்கு சென்ற ஞாபகங்கள் மங்கலாக இருக்கின்றன . சில சமயம் பேப்பர் திருத்தும் பொழுது அவர் போட்ட மதிப்பெண்களை கூட்டி மொத்த கணக்கை சொன்ன நியாபகங்களும் உண்டு . 

ஓரளவிற்கு வளர்ந்த பிறகு எங்கே அட்வைஸ் சொல்லிவிட போகிறாரோ என்று பயந்து ஓடியதும் உண்டு . வாலிப வயதில் அட்வைஸ் என்றால் அப்படி ஒரு அலர்ஜி . அவரும் இவனிடம் இது வேலைக்கு ஆகாது என்று தெரிந்து கொண்டு அட்வைஸ் பண்ணுவதையே விட்டு விட்டார். 

சீன தேசத்தில் யின்- யாங் என்ற ஒரு தத்துவம் உள்ளது . எதிரும் புதிருமாக இருந்தாலும் அவை ஒன்றோடு ஒன்றாக இருக்கும். பக்க பலமாக இருக்கும். பொறுமையின் சிகரமான பெரியப்பவிற்கு சற்றே படபடக்ககூடிய பெரியம்மா . ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் என்பதற்கான உதாரணம். நம் சகோதரிகளை பற்றி தனி கட்டுரையே எழுதலாம் என்பதனால் அவர்களை வேறொரு சந்தர்பத்தில் சந்திப்போம், அலசுவோம்.. 

ஆக பெரியப்பா காட்டிய வழியில்  வளர்ந்த பலரில் நானும் ஒருவன் . அதற்கு என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று நம்புகிறேன். 

இனிமேல் அந்த செம்மண் பூமியில் கால் வைக்க முடியாது என்று என்னும் பொழுது எனோ ஒரு சோகம் வந்து விடுகிறது. நமக்கு மட்டும் இல்லை , பெரியப்பாவின் கால் படாமல்  வாழப்போகும் அந்த மண்ணுக்கும் தான் .. 

என் வாழ்வில் என் அப்பாவுக்கு பிறகு நான் மதிக்கும் பெரிய மனிதர் நீங்கள். வாழ்த்த வயதில்லை , வணங்குகிறேன் 🙏🏼..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.