குடைக்குள் நடை
டிசம்பரில் நிம்மதியாக ஒரு வாக்கிங் போக முடிகிறதா இந்த ஊரில் . கால் மைல் நடப்பதற்குள் மழை துரத்துகிறது . நாலு மணிக்கே எழுந்து போனாலும் கூடவே வந்து தொலைக்கிறது. வானிலை அறிக்கை எல்லாம் முடிக்கு சமானம் என்பது போல நடந்து கொள்கிறது. மழை தரும் வருணன் மற்ற மாதங்களில் வேர்க்கடலை சாப்பிட்டு வேடிக்கை பார்ப்பான் போல.. டிசம்பரில் மட்டும், முதல் மாத மாப்பிள்ளை போல வெறியுடன் வெளுத்து வாங்குகிறான். அடுத்த ஆண்டு டிசம்பரில் மட்டும் மழை பெய்யாத இடத்திற்கு மாறுவது என்று மன டைரியில் குறித்துக்கொண்டேன்.
நல்ல வேலை இன்று வானம் பல்லை இளித்து காட்டியது. நேற்றோடு வாக்கிங் போகாமல் ஆறு நாட்கள் வேறு ஆகியிருந்தது .ஆறு மொக்கையான நாட்கள். என்னதான் அப்பார்ட்மெண்டின் உள்ளேயே நடந்தாலும் , பொது வெளியில் செல்வது போல வருமா? எவ்வளவு தான் வெறுத்தாலும், இந்த சுமாரான காற்றும் , புகை கக்கும் லாரிகளையும் பார்த்தால் தான் வாக்கிங் போகிற திருப்தி வருகிறது. மழை வந்து தொலைவதற்குள் கிளம்பிவிடலாம் என்று முடிவெடுத்தேன்.சோமுவிற்கு தகவல் சொன்னேன் . குடை சகிதமாக வண்டியை கிளப்பினேன்.
இத்தனைக்கும் சென்னையில் சாலை ஓரத்தில் நடந்து போவது எமனோடு மூன்று சீட்டு ஆடுவதற்கு சமம் . வண்டியே வராத பெசன்ட் நகரின் பீச்சிருக்கே தினமும் வாக்கிங் போக, நாம் என்ன அம்பானியா ? நமக்கு தோதுப்படும் கிண்டியின் குறுக்கு தெருக்களில் வாக்கிங் போகலாம். ஆனால் சில தெருக்களில் மூத்திர நாற்றம் அடிக்கும், மற்றவற்றில் வெறி நாய் துரத்தும் . இரண்டும் நமக்கு ஆகாது. ஐந்து பர்லாங் தெரு வழியாக மூக்கை பிடிக்காமல் வேளச்சேரி ரோடு வருபவர்களுக்கு விருதே தரலாம். இதிலிருந்து தப்பிக்க வண்டியை எடுத்து வேளச்சேரி ஹண்ட்ரட் பீட் ரோடு வந்து , அங்கிருந்து வாக்கிங் சம்பவத்தை ஆரம்பிப்பேன் . வாக்கிங் போவதற்கு வண்டியா என்று வாயை பிளக்க வேண்டாம். வண்டியில் போய், வாக்கிங் போகும் ஆட்கள் அதிகம் இருக்கும் நகரங்களில் சென்னைக்கு நிரந்தர இடம் எப்போதும் உண்டு. வேளச்சேரி வரவேற்றது. ஓரத்தில் இருந்த சித்தி விநாயகருக்கு எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு வணக்கத்தை போட்டு வைத்தேன். அப்படியே வண்டியை ஒரு ஓரத்தில் போட்டு நடக்க ஆரம்பித்தேன்.
இத்தனை தகிடு தத்தம் செய்து வாக்கிங் போக வேண்டுமா என்ற கேள்வி எழலாம். என்ன பண்ணி தொலைவது , எல்லாம் இந்த சுகருக்கு பயந்து செய்ய வேண்டியிருக்கிறது.
நாற்பது வயதில் சுகர் இருப்பதாக சொன்னார்கள் , அதற்கு அடுத்த வாரத்தில் இருந்து நடக்க ஆரம்பித்தேன். இன்னும் முடிந்த பாடில்லை. ஒரு வாரம் நிப்பாட்டினால் இரண்டு புள்ளிகள் உயரும். உயிர் சமாச்சாரம், நடப்பதே சிறந்தது என்று அடுத்த வாரம் மறுபடியும் ஆரம்பிப்பேன். கணக்கெடுத்து பார்த்தல் , என் அறுபது வருட வாழ்க்கையில் , எப்படியும் நாலு வருடத்தை வாக்கிங்கிற்கே தாரை வார்த்து கொடுத்திருப்பேன். சுகரும் குறையவில்லை, உடலும் வலுக்கவில்லை. வாங்கி வந்த வரம் போல. நடந்தே வேளச்சேரி ஏரியின் அருகே வந்திருந்தேன். பச்சை பசேல் என்று இருந்தது அந்த ஏரி . முழு கூவமாக ஆக்காமல் விட்டார்களே என்று மனதை தேற்றிக் கொண்டேன்.
சுகர் சிந்தனைகள் விடாமல் துரத்தியது. காரணம் கடைசி வரை நம்முடனே இருந்து, கட்டை ஏறுவது , சுகர் போன்ற வியாதிகள் தான். அதனால், இவற்றை ஒரு ஊடலுடன் அணுகுவது நல்லது என்றே தோன்றியது . அப்பொழுது சட்டென்று சுகரெல்லாம் ஒரு வியாதியே இல்லை என்று சோமு அனுப்பிய வீடியோ நியாபகம் வந்தது. ஒரு வாரம் மாத்திரை சாப்பிடாமல் அவன் சொன்னது போல செய்து பார்க்கலாமா என்று தோன்றியது. ஆனால் அதற்கும் ஒரு நேரம் காலம் வேண்டாமா? நாலு மாதத்திற்கு முன்னால் தான், தம்பி பையன் கல்யாணத்தில் வெளுத்து வாங்கி . சுகர் அதிகமாகி, ஆஸ்பத்திரியில் அறுபத்தைந்தாயிரம் தண்டம் அழுது வெளி வந்தேன்.
ஐந்து நாட்களில் விட்டு விடுவார்கள் என்று பார்த்தால் , உடம்பில் பொட்டாசியம் இல்லை, சோடியம் இல்லை, மஞ்சள், குங்குமம் இல்லை என பதினைந்து நாட்களுக்கு வைத்து செய்து விட்டார்கள். அதுவரை அரை சர்க்கரையில் காபி போட்டு கொடுத்த அம்புஜம், அன்றோடு அதையும் நிறுத்தினாள் . அதனால் சோமுவின் வீடியோவை முதலில் அவளுக்கு அனுப்பி, அவள் சரி என்றால் முயற்சி செய்யலாம் என்று முடிவெடுத்தேன். மெதுவாக திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஹோட்டல் வாசலுக்கு வந்தடைந்தேன். இந்நேரம் சோமு வந்திருக்க வேண்டும், வரவில்லை. கால் மணி நேர காத்திருப்பில் மூன்று முறை போன் செய்தும் எடுக்கவில்லை. வந்த பக்கமே திரும்பி நடக்க ஆரம்பித்தேன்.
மூளையின் ஓரத்தில் சுகருக்கு மட்டும் நிரந்தர மருந்து கண்டுபிடித்தால் எப்படி இருக்கும் என்ற நப்பாசை தோன்றியது. குடிக்கும் ஆறு காப்பியிலும் சக்கரை மழை தூவலாம். ஸ்ரீ கிருஷ்ணா மைசூர் பாகையும், ஒரு டப்பா குளோப் ஜாமுனையும் விரல் சப்பி சாப்பிடலாம். ஒரு பயல் கேள்வி கேட்க மாட்டான். யோசிக்கும் பொழுதே நாக்கில் எச்சில் ஊறியது. ஒரு முறை மருமகள் அன்பாக
சுகர் பிரீ மைசூர்பா வாங்கி கொடுத்தாள் . ஒரே மூச்சில் கால் டப்பாவை காலி செய்தேன். அவ்வளவு கேவலமான ஒரு மைசூர் பாகை வாழ்க்கையில் நான் தின்றதே இல்லை. குமட்டிக்கொண்டு வந்துவிட்டது. யாரை கேட்டு இந்த கருமத்தை எல்லாம் தயார் செய்கிறார்கள். போன மாதம் வரை போனால் போகிறது என்று வெல்லத்தால் செய்த கடலை மிட்டாயை அம்புஜம் அனுமதித்திருந்தாள் . சமீபத்தைய ஆஸ்பத்திரி விஜயத்திற்கு பிறகு அதுவும் அவுட்.
ஒரு வழியாக வந்த வழியிலேயே நடந்து, ரத்னா கபேவை வந்தடைந்தேன்.
“என்ன சார் ஒருவாரமா காணோம்” என்று முதலாளி குமரேசன் அன்புடன் வரவேற்றார்.
“மழையில எங்க சார் “ என்று சொல்லியபடியே , ஆஸ்தான இடத்தை நோக்கி நடந்தேன். அமர்ந்தேன்.
சேட்டு பையனை போல ஒருவன் வந்தான்.
“ஆப்கோ க்யா சாஹியே சார் “ என்றான்.
நான் மைதா மாவு கலரில் இருப்பதனால் ஹிந்திக்காரன் என்று நினைத்து விட்டான் போல.
பதிலளிப்பதற்குள் கோபியே வந்துவிட்டான்.
“புதுசு சார், போன வாரம் தான் ஒரு செட் பிஹார்லேர்ந்து வந்தாங்க” என்றபடியே டேபிளை துடைத்தான்.
“சக்கரை தூக்கலா ஒரு பில்டர் காபி கொடுப்பா” என்றேன்.
சுகர் சிந்தனைகள் மறைந்தன.
கருத்துகள் இல்லை