ரஜினி எனும் மாயோன் - 4 - தர்மத்தின் தலைவன்


இந்த தொடரின் முதல் மூன்று பாகங்களை படிக்க - 

 

ரஜினி எனும் மாயோன் - 1 - படிக்க - https://tamil-thinnai.blogspot.com/2021/11/1.html 

 ரஜினி எனும் மாயோன் - 2 - படிக்க - https://tamil-thinnai.blogspot.com/2021/12/2.html

 ரஜினி எனும் மாயோன் - 3 - படிக்க - https://tamil-thinnai.blogspot.com/2021/12/3.html 



பாபா தோல்வி , சந்திரமுகி வெற்றி , சிவாஜி மிகப்பெரிய ஹிட். இதை தாண்டி என்ன செய்து விட முடியும் என்ற கேள்வி வந்தது. ஷங்கர் தனது பல ஆண்டு கனவான ரோபோட்.எந்திரன்  படத்தின் கதையை தூசி தட்டி எடுத்து வைத்தார்.   ஆனால் அந்த படத்தை எடுக்க இரண்டு ஆண்டுகள் தேவைப்படும், அதற்குள் ஒரு சிறிய படம் பண்ணிவிடலாம் என்ற எண்ணத்தில் ரஜினி இருக்கிறார். அப்பொழுது தான் அவருக்கு ஒரு விஷயம் சொல்லப்படுகிறது , அது அவரது அடுத்த படம் என்ன என்பதை முடிவும் செய்கிறது. 




ரஜினி என்றுமே தர்மத்திற்கு கட்டுப்பட்டவர். அவர் இத்தனை ஆண்டுகள் திரை துறையில்  கோலோச்சி ராஜாவாக நிற்பதற்கான  காரணங்களில் இதுவும் ஒன்று. அதே போல நன்றி மறக்காதவர். உதாரணமாக பாலச்சந்தருக்கும் அவருக்கும் இருக்கும் உறவை பற்றி கூறலாம். 1975இல் அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினி என்னும் ஒரு அற்புத நடிகரை அறிமுகம் செய்கிறார் பாலச்சந்தர். அந்த படம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அன்றைய ஹிந்து நாளிதழ் ரஜினியின் அறிமுகத்தை குறிப்பிட்டு பாராட்டி இருந்தார்கள். அங்கு ஆரம்பித்தது அந்த உன்னதமான உறவு. 


அதன் பிறகு அவர் படங்களில் நிறைய நடித்திருக்கிறார். அதே போல பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பு நிறுவனத்தில் பல படங்கள் செய்துள்ளார். முக்கியமாக 90களில் வந்த “அண்ணாமலை” மற்றும் முத்து படங்கள் ரஜினியின் ஸ்டார் அந்தஸ்தை உயர்த்தின என்றால் மிகையாகாது. தன வாழ்க்கையின் முக்கியமான விஷயமான கல்யாணத்தை கூட பாலச்சந்தரிடம் ஆசி  பெற்ற பிறகே நடத்தினார். அப்படிப்பட்டவருக்கு ஒரு பிரச்சனை என்றால் சும்மா இருப்பாரா? 


ஒரு மாலை நேரத்தில் ரஜினிக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது. மறுபுறத்தில் பாலச்சந்தர் . “எனக்கு ஒரு படம் பண்றியா “ என்று கேட்க, நொடிப்பொழுதும் யோசிக்காமல் சரி என்று ஆமோதிக்கிறார் ரஜினி. தன் ஆசானுக்கு ஒரு பிரச்சனை என்றால் அடுத்த கணமே வந்து நிற்பவர் ரஜினி, இதை கூடவா செய்ய மாட்டார்? ரஜினி இது போல பல தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்திருக்கிறார், ஆனால் வெளிப்படையாக “ஆமாம் எனக்கு இருந்த பணப்பிரச்சனியாயால் தான் ரஜினியின் கால்ஷீட் கேட்டேன் “ என்று வெளிப்படையாகவே சொன்னார் பாலச்சந்தர். 


இப்படி ஒரு பக்கம் கதை போய்க்கொண்டிருக்க, ரஜினி “கத பறயும் போல் “ என்ற மலையாள படத்தை பார்க்கிறார். அது பிடித்து போக உடனே அந்த படத்தின் ரீமேக் உரிமையை கவிதாலயா வாங்குகிறது. ரஜினி பி வாசுவை அழைக்கிறார். 

 பி வாசு ரஜினிக்கு “வேட்டையன்” எனும் கதையை ஏற்கனவே சொல்லி வைத்திருந்தார். ஒருவேளை அதற்காக இருக்குமோ என்று நினைத்து ரஜினியை சந்தித்து, கடைசியில் குசேலன் என்கிற அந்த படம் உதயமாகிறது. ரஜினிக்கு என்றுமே ஆணிகத்தில் ஒரு ஆர்வம் உண்டு. இந்த கதை புராண கதை வேறு. ஒரே சிக்கல், இதில் ரஜினிக்கு பெரிய ரோல் கிடையாது.  சின்ன பட்ஜெட்டில் சீக்கிரம் இந்த படத்தை எடுத்து ஒரு நல்ல லாபத்தை தனது ஆசானுக்கு தர ஆசை பட்டார் ரஜினி. ஆனால் என்ன நடந்தது தெரியுமா? 


 கிளைமாக்ஸில் பத்து நிமிடம் வந்து உருக்கமான நட்பை பற்றி பேசி படத்தை முடிக்க வேண்டிய ரஜினியின் கதாபாத்திரம், முக்கால் படத்திற்கு மேல் வருகிறது. குசேலன் படத்தில்  ரஜினி நடித்திருக்கிறார் என்பது போய் , ரஜினியின் குசேலனாக அது மாறுகிறது. படத்தின் ஆதி நாதமே ஸ்தம்பிக்கிறது. ஆனாலும், ஒரு மீடியம் பட்ஜெட்டிலேயே இந்த படம் தயாராகிறது. ஒரு பக்கம் ரஜினியே இந்த படத்தில்  நான் கால் பங்கு தான் என்று கூறுகிறார். மறுபக்கமோ, இது பக்கா ரஜினி படம் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. அழுக்காக கிடைத்தாலும் தங்கம், தங்கம் தானே? ரஜினி எனும் மாயோனும் அப்படித்தான். 


 இதற்கு முன் வந்த படங்கள் அதிரி புதிரி ஹிட், ரஜினி - நயன்தாரா காம்பினேஷன் வேறு, பரபரப்பிற்கு கேட்கவா வேண்டும். படத்தை வாங்க நீ நான் என்று போட்டி போடுகிறார்கள் . பல மடங்கு விலை ஏற்றி பேசப்படுகிறது. பாலச்சந்தரின் கம்பெனி என்பதால் ரஜினியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  ஒரு வழியாக பிரமிட் சாய் மீரா அந்த படத்தை 60 கோடிக்கு வாங்குகிறது. ரஜினியின் சம்பளத்தை தவிர்த்து பார்த்தால் படத்தின் பட்ஜெட் வெறும் பத்து கோடி தான் , அதனால்  தயாரிப்பாளருக்கு பெருத்த லாபம்


அறுபது கோடிக்கு வாங்கிய பிரமிட் சாய்  மீரா லாபம் வைத்து டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு விற்க, அவர்கள் தன் பங்கிற்கு ஒரு லாபம் பார்த்து அதை திரையிட, படத்தின் வர்த்தகம் எங்கோ போகிறது.  படம் வெளி வருகிறது. ரஜினியின் டெம்ப்லேட் படமாகவும் இல்லாமல், ஒரு கலை படமாகவும் இல்லாமல் ரசிகர்களை குழப்புகிறது. அதனால் படம் சுமார் என்ற தகவல் பரவுகிறது.  இருந்தாலும், ரஜினியின் நடிப்பு, வடிவேலுவின் நகைச்சுவை , கிளைமாக்ஸ் என்று  இருந்ததினால் , ஓரளவிற்கு நல்ல வசூலை பெறுகிறது. 


வெளியிட்ட முதல் நாளே லண்டனில் ஒரு லட்சம் பவுண்ட் எடுக்கிறது. அமெரிக்காவிலும் நல்ல ஓப்பனிங் . ரஜினி படமாக இல்லை என்ற செய்தி பரவ பரவ வசூல் குறைகிறது. நல்ல விலைக்கு விற்றிருந்தால் குசேலனும் வெற்றி படமே. 

படத்தை இமாலய விலைக்கு சாய்மீரா விடம் வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. ஏற்கனவே படத்தின் பிசினெஸால் நொந்திருந்த ரஜினி  எந்திரன் போட்டோ ஷூட்டிற்க்காக அமெரிக்க சென்றிருந்தார். இந்த விஷயம் அவர் காதுகளுக்கு எட்டுகிறது. அவர் சென்னை விரைகிறார்.    


தன் ஆசானுக்கு சிக்கல் என்பதினால் படத்தில் நடித்தார். கடைசியில் படம் வெளிவந்து சுமாராக ஓடியதால் வந்த பிரச்சனைகளும் அவர் தலையில் விழுந்தது. ஏற்கனவே பாபா படத்தின் தோல்வியின் பொது பணத்தை திருப்பி கொடுத்து ஒரு பெஞ்ச் மார்க்கை செட் செய்திருந்தார். அது அவரையே திருப்பி அடித்தது. ஒரு வழியாக விநியோகிஸ்தர் களிடம் பேசி கால் பங்கு தொகையை திருப்பித் தருகிறார். இந்த படத்தில் நடித்ததனால் அவருக்கு மனக்கஷ்டமும் , பண கஷ்டமும் தான் மிச்சம். 


வெற்றி மேல் வெற்றி கண்ட ரஜினிக்கு மீண்டும் ஒரு தோல்வி. ஆனாலும் துவண்டு விடாமல் இந்தியாவின் மிகப்பெரிய படமான எந்திரனில் நடிக்க ஆரம்பிக்கிறார்.  



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.